கரூர்: நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர், நாமக்கல் மாவட்டம் மோகனூர் வழியாக கரூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வாங்கல் பகுதிக்கு நேற்று வருகை தந்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (மார்ச்.4) நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கரூர் மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளை துவைக்கி வைத்தும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்கும் விழா மற்றும் ரேக்ளா குதிரைப் பந்தயம், திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
முன்னதாக திமுக இளைஞரணியை வலுப்படுத்துவதற்காகவும், தேர்தல் பிரசாரத்துக்காகவும், நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, கரூர் மாவட்டத்திற்கு வருகை தருவது இதுவே முதல்முறை என்பதால் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழி நெடுங்கிலும் பெண்கள், திமுகவினர் உள்ளிட்டோர் இணைந்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கரூரில் திமுக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்குகிறார்.
அரசு மற்றும் திமுக சார்ந்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டாலும், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வெற்றிக்கனியை பறித்த திமுகவின் தேர்தல் சூத்திரதாரியாக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்திற்கு சென்றிருப்பது கவனத்திற்குரிய ஒன்றாக அமைந்துள்ளது.
இத்தகைய விழாக்களில் பங்கேற்பதனுடன், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்கும், வேட்பாளர்கள் தேர்வு மற்றும் வேட்பாளர்கள் குறித்து விவாதிப்பதற்குமான சந்திப்பாக இவை இருக்கும் என கூறப்படுகிறது. அத்தோடு, கரூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் இளைஞர் அணியைச் சேர்ந்த ஒருவருக்கே இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் உள்ள திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோடு தேர்தலில் பாஜக, அதிமுகவிற்கு முறையாக வாக்கு சேகரிக்கவில்லை - எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத்