கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வி. செந்தில் பாலாஜி பவுண்டேசன் சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 4 ஆயிரம் கிலோ கபசுரக் குடிநீர் கசாயப் பொடியினை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந் மு வடநேரேவிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் கரோனா பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு (வார் ரூம்) சென்று பொதுமக்கள் எவ்வகையான புகார்களையும், உதவிகளையும் கேட்டு மையத்தை நாடுகின்றனர் என அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, பொதுமக்கள் அழைத்த தொலைபேசி அழைப்பை எடுத்து மறுமுனையிலுள்ள உதவி கோரும் நபரிடம் பேசினார். அவரும் தனக்குத் தேவையான உதவியை தொலைபேசி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கூற, அதற்குப் பதிலளித்த அமைச்சர், கரோனா வைரஸ் குறித்து எடுத்துக் கூறியதுடன் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆறுதலும் தெரிவித்தார்.
மேலும், ஒரு அழைப்பில் பேசிய அமைச்சர், தேவையை கேட்டறிந்ததுடன் உடனே, அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அங்கு வரும் தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேசி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். தற்போது, அதேபோல் மின்சாரத்துறை அமைச்சரும் செய்திருப்பது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கரோனா நிவராண நிதி வழங்கிய சிறுவனுக்கு குவியும் பாராட்டுகள்!