கரூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII- Confederation of Indian Industry) சார்பாக தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) கரூர் தலைவர் தொழிலதிபர் புருஷோத்தமன், துணைத் தலைவர் வெங்கடேசன், ஆட்டோமொபைல்ஸ் சங்கத்தின் தலைவர் முருகனந்தம் உள்ளிட்ட தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
அப்போது பேசிய செந்தில்பாலாஜி, "தமிழ்நாட்டில் தொழில்முனைவோர் புதிய மின் இணைப்புப் பெறுவதற்கான நடைமுறைகள் முதலமைச்சரின் அறிவுரைப்படி எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அடுத்த பத்தாண்டுகளில் 17,980 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ரூ.19,722 கோடி நிதி ஒதுக்கீடு
தொழில் வளர்ச்சிக்கும், தனிநபர் வீடுகளுக்கு மின்சேவை வழங்குவதற்கும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கும் நடப்பு நிதிநிலை அறிக்கையில் 19 ஆயிரத்து 722 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிக மின்பளு (Over Load) அதிகமுள்ள இடங்களில் 5,700 மின் மாற்றிகள், குறைந்த மின்னழுத்த (Low Voltage) குறைபாடுள்ள இடங்களில் 3,200 மின் மாற்றிகள் என மொத்தமாக 8,900 மின்மாற்றிகளை மாற்றியமைக்க ரூ.623 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் மாற்றியமைப்பதற்கான முனைப்பில் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
2 லட்சத்து 37 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை
மின் நுகர்வோர் குறை தீர்ப்பதற்கு, மின்னகம் தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே இதுவரை சுமார் இரண்டு லட்சத்து 48 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு அவற்றில் இரண்டு லட்சத்து 37 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்திட விரைவில் நான்கு இடங்களில் புதிய துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தொழில் ஏற்றுமதி தற்பொழுது ரூ.8,000 கோடி அளவில் உள்ளதை, 2030ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்திட இந்திய தொழில் கூட்டமைப்புத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றிட தற்போது அமைந்துள்ள திமுக அரசு தயாராக உள்ளது.
எதிர்காலத்தில் திருப்பூரைவிட கரூர் தொழில் வளர்ச்சிமிக்க நகரமாக மாறிவிட்டது என்ற பெருமையை உண்டாக்கிட அனைத்து நடவடிக்கைகளும் வளர்ச்சிக்கான காலமாக அமைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: விரைவில் சுற்றுலா தலங்கள் திறக்க நடவடிக்கை - வனத் துறை அமைச்சர்