கரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஜூன் 26) நடைபெற்றது. அது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் மாவட்டத்திற்கு ஜூலை 2ஆம் தேதி வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க ஒரு லட்சம் பேர் எழுச்சியோடு கலந்துகொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும். கரூர் திருமாநிலையூர் பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இதுவரை தமிழ்நாட்டிலேயே இல்லாத அளவிற்கு 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை பொதுத்தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதுபோல எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறுவோம். கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் திமுக அரசுக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
![கரூர் மாவட்ட தி.மு.கழகம் சார்பில் செயல் வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-01-minister-senthilbalaji-speach-admk-leader-speach-reaction-news-vis-scr-tn10050_27062022074456_2706f_1656296096_373.jpg)
எஸ்.பி.வேலுமணியை வம்பிழுத்த செந்தில்பாலாஜி: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக ஆட்சிக்கு மக்கள் மணி அடிப்பார்கள் என்று மணி என்று பெயர் கொண்டுள்ள ஒருவர் பேசியுள்ளார். அவர் கிரிப்டோ மணியோ எந்த மணியாக வேண்டுமானாலும் இருக்கட்டும் எந்த காலத்திலும் கறந்த பால் ஒருபோதும் மடி புகாது. ஒருபோதும் ஊர்க்குருவி பருந்தாகாது.
முட்டி போட்டு முதலமைச்சர் ஆனவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் மீண்டும் முதலமைச்சர் ஆகலாம் என்று நினைத்தால் அது நடக்காது. இனி தமிழ்நாட்டில் நூற்றாண்டு காலம் ஆளப்போவது திமுக தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று தமிழ்நாடு வாக்காளர்கள் உறுதி செய்துவிட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றது.
![முட்டி போட்டு முதல்வர் ஆனவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக முடியாது - செந்தில் பாலாஜி பேச்சு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-01-minister-senthilbalaji-speach-admk-leader-speach-reaction-news-vis-scr-tn10050_27062022074456_2706f_1656296096_583.jpg)
நிச்சயமாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39க்கும் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இந்தியாவையே வழிநடத்தக்கூடிய கட்சியாக திமுகவும், திமுக அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தக் கூடிய சூழ்நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி காட்டுவார். அதற்காக திமுக உறுப்பினர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்.
ஜூன் 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் கரூர் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளிட்ட திமுக சார்பில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மக்களுக்கு அரசின் திட்டங்களைக் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்" என்று பேசினார்.
இக்கூட்டத்தில் திமுக நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி, மாநில சட்டத் துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பேரூர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: video - ஈபிஎஸ் ஆதரவாளர்களால் பேனரில் இருந்து கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் முகம்