கரூர்: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் உப்பிடமங்கலம் சக்தி திருமண மண்டபம் அரங்கில் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமையில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (செப். 19) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், திமுக மாநில சட்டப் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் தாந்தோணி, கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் எம்.ஆர். ரகுநாதன், தாந்தோணி மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் கோயம்பள்ளி பாஸ்கர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில வர்த்தகப் பிரிவுச் செயலாளர் விசா. சண்முகம், மாவட்டச் செயலாளர் மூர்த்தி, விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தேவேந்திரன், திமுக தாந்தோணி ஒன்றியத்திற்குள்பட்ட ஜெகதாபி வெள்ளியணை உள்ளிட்ட எட்டு ஊராட்சிகளைச் சேர்ந்த பூத் பொறுப்பாளர்கள், வார்டு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
திட்டங்கள் அதிகரிக்கப்படும்
இக்கூட்டத்தில் பேசிய செந்தில்பாலாஜி, "தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் எட்டு ஊராட்சிகள் 56 வாக்குச்சாவடிகளில் உள்ள 38 ஆயிரத்து 138 வாக்காளர்கள், வீடு வீடாகச் சென்று திண்ணைப் பரப்புரை மேற்கொண்டு கரூர் திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும்.
கடந்த நான்கு மாத கால ஆட்சியில் எட்டு ஊராட்சிகளில் தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துக்கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும். எதிர்க்கட்சி வேட்பாளர்களை வைப்புத்தொகையை இழக்கச் செய்ய வேண்டும்.
நான்கு மாதங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை கரூர் மாவட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் சட்டப்பேரவையில் எடுத்துக்கூறிய கோரிக்கைகளை ஏற்று 1,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை, தடுப்பணைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்துக்கு வேளாண்மை கல்லூரி, வெள்ளியணை, குளித்தலை, பஞ்சப்பட்டி, ஜெகதாபி, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி ஆற்றிலிருந்து ஏரிகளுக்குத் தண்ணீர் நிரப்பும் திட்டம் ஆகியவற்றை விரைவில் செயல்படுத்தவும், கரூரை பசுமையான பகுதியாக்கி மீண்டும் விவசாயத்தைச் செழிப்படையச் செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்.
முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதலமைச்சர்
முதலமைச்சரிடம் கோரிக்கைகளை எடுத்துக்கூறும் முன்னரே அதனை நிறைவேற்றக்கூடிய முதலமைச்சராகவும், அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டக்கூடிய முதலமைச்சராகவும் தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார். இந்தியாவில் உள்ள மற்ற முதலமைச்சர்களுக்கு முன்னுதாரணமாகவும், முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதலமைச்சராகவும் திமுக தலைவர் திகழ்ந்துவருகிறார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளையும் கைப்பற்றி கரூர் மாவட்டம் ’கருணாநிதியின் கோட்டை’ என்பதை நிரூபித்துள்ளோம். நமக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைக் கூடிய வகையிலும், வாக்களித்தவர்கள் ஏன் வாக்களிக்காமல் விட்டோம் என வருத்தப்படக் கூடிய வகையிலும் எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் செயலாற்றிவருகின்றனர்.
இன்னும் கரூர் மாவட்டத்துக்குச் சிறப்புமிக்க திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட உள்ளன. எனவே அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி ஊரக, உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற தொண்டர்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: வீதியில் கல்வி கற்கும் பழங்குடி மாணவர்கள்: மேற்கு வங்க ஆசிரியரின் புது முயற்சி