கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள திருக்கண்மாலீஸ்வரர் கோயிலின் பின்புறம் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக மாயனூர் காவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மாயனூர் காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் துறையினரைக் கண்டதும், அவர்கள் வந்த வாகனத்தை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதில் இரண்டு கார்கள், 18 இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டுவந்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சேவல் சண்டையை அனுமதியின்றி நடத்தியதாக சித்தலவாய் கிழக்கு காலனியைச் சேர்ந்த சரண்ராஜ் (29), பொய்கை புதூரைச் சேர்ந்த மருதுபாண்டியன் (39), கரூரைச் சேர்ந்த மலையப்பன் (27) பழைய பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (27), குளித்தலையைச் சேர்ந்த ராஜேஸ் (28) ஆகிய ஐந்து பேரை மாயனூர் காவலர்கள் கைதுசெய்து கிருஷ்ணராயபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.
அப்போது, நீதிபதி கரூர் கிளைச் சிறையில் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், சில இருசக்கர வாகன உரிமையாளர்களைக் கண்டறிந்து கைதுசெய்ய காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் கருங்கோழி வளர்ப்பில் ரூ.60 ஆயிரம் வருமானம்: அசத்தும் ராமநாதபுரம் பெண்மணி!