கரூர்: கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு டிஎன்டி எனும் ஒற்றைச் சாதிச்சான்று வழங்கக் கோரி சீர்மரபினர் நலச் சங்கம் மற்றும் 68 சமுதாய அமைப்புகள் சார்பில் நேற்று (நவ.28) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம், கொங்குநாடு வேட்டுவர் கவுண்டர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் எம்.முனுசாமி தலைமையில் நடைபெற்றது.
பின், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு எம்.முனுசாமி அளித்த பேட்டியில் கூறுகையில், “தமிழகம் முழுவதும் வாழும் இரண்டரை கோடி மக்களின் வாழ்வாதாரம், கல்வி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒற்றைச் சான்றிதழ் எனப்படும் டிஎன்டி சான்றிதழ் வழங்கக் கோரி கரூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களும், தற்பொழுது ஆண்டு வரும் ஆட்சியாளர்களுக்கும் வலியுறுத்தப்பட்டு வரும் முக்கியமான கோரிக்கையாகும். இது தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டமாக கோரிக்கையானது அரசுக்கு வைத்து போராடி வரும் சூழலில், தொடர்ந்து தமிழகத்தில் பத்து ஆண்டுகள் ஆட்சி நடத்திய அதிமுக அரசு, கோரிக்கைகளை செவி சாய்க்காததால் ஒன்றிணைந்து 2011 தேர்தலில் அதிமுகவை தோற்கடித்தோம்.
இந்த திமுக ஆட்சி அமைந்ததும் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக தமிழக முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நம்பித்தான் அனைவரும் திமுக கட்சியை வெற்றி பெறச் செய்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினோம். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு காலமாக திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக மீண்டும் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலதாமதப்படுத்தி வருகிறது.
ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், இட ஒதுக்கீட்டால் கல்வி, வேலைவாய்ப்பில் இரண்டு தலைமுறையைச் சேர்ந்த 68 சமூக இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பூர்வகுடி மக்களாக உள்ள பெரும்பான்மை சமூகத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்காததால் சமூக முன்னேற்றம் தடைபட்டுள்ளது. தமிழகத்தில் டிஎன்டி என்ற பிரிவின் கீழ் 68 சமூகங்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கையை முன் வைத்து வருகிறோம்.
குறவர் சமூகத்தில் 28 சமூகப் பிரிவுகள், மறவர் சமூகத்தில் 6 பிரிவுகள், கள்ளர் சமூகத்தில் 3 பிரிவுகள், ஊராளி கவுண்டர், தொட்டிய நாயக்கர், போயர் வேட்டுவ கவுண்டர் என மொத்தம் 68 சமூகங்கள் ஒன்றிணைத்து ஒரே சாதிச் சான்றிதழ் வழங்கிய இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு அமைத்த ரோகினி கமிஷன் பரிந்துரைப்படி, பிற்படுத்தப்பட்ட ஓபிசி சமூகத்தில் டிஎன்டி என்ற சமூகம் மிகவும் பின்தங்கி உள்ளது என பரிந்துரை வழங்கியுள்ளது. தனி இட ஒதுக்கீடாக 9 சதவீதம் வழங்க வேண்டும் என பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசும் அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, ஒற்றைச் சான்றிதழ் வழங்காமல் மத்திய அரசுக்கு டிஎன்டி என்ற ஒன்றே தமிழகத்தில் தற்போது இல்லை என்று அறிக்கையை அனுப்பி வைக்கின்றனர். இதனால் நாங்கள் மத்திய அரசு மூலம் பயனடைய முடியாமல் பாதிப்பைச் சந்தித்து வருகிறோம். மாநில அரசு வழங்கினால், மத்திய அரசு பின்தங்கிய சமூகங்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்க தயாராக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: நெல்லையில் மழைநீரை அகற்றுவதிலும் சாதி பாகுபாடா? முழுப் பின்னணி என்ன?