கரூர் மாவட்டத்தில் ஓட்டுநர் பிரான்சிஸ்சேவியர்(29) என்பவர், 17 வயது சிறுமியைக் கடந்தாண்டு ஜூலை 24ஆம் தேதி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக எழுந்த புகாரின்பேரில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், கொலை மிரட்டல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்திருந்தனர்.
10 ஆண்டுகள் சிறைத் தண்டனை: இதுதொடர்பான வழக்கு இன்று (ஏப்.26) கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் இறுதியாக, பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் என்று தீர்ப்பளிப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு: மேலும், இவ்விரு அபராதங்களைக் கட்டத்தவறினால், மேலும் 1 ஆண்டு சிறைத்தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதனைக் கட்டத்தவறினால், மேலும் 1 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு, 3 மாதங்களுக்குள் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் சமீபகாலங்களாக அதிகரித்துக் கொண்டே வரும் பாலியல் வன்கொடுமைகளும் அவற்றின் மீதான வழக்குகளில் நீதிமன்றங்கள் விரைவாக தீர்ப்பு வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளிகளில் பாலியல் புகார் அளிப்பதற்கான புகார் பெட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு