கரூர்: கிருஷ்ணராயபுரம் வட்டம் மகாதானபுரம் பகுதியில் மக்கள் பயன்படுத்திவரும் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் அமைந்துள்ள மகாதானபுரம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் முன்பு ரயில் நிலையத்தை ஆய்வுசெய்ய வந்திருந்த ரயில்வே பொதுமேலாளர், பெயர்ப்பலகை சேதம் அடைந்திருப்பதால் அதனைப் புதுப்பிக்க ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து பெயர்ப்பலகை வண்ணம் பூசி மாற்றி அமைக்கப்பட்டது.
அதில் 'மகாதானபுரம்' என்ற தமிழ் எழுத்திற்குப் பதிலாக 'மஹாதானபுரம்' என சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு ரயில் பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெயர்ப் பலகையை முன்பு இருந்ததைப் போல தமிழ்ச் சொல்லில் மாற்றி அமைக்காவிட்டால் தார்ப்பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என தெய்வத்தமிழ் பேரவை மாவட்டக் கிளை ஒருங்கிணைப்பாளர் தமிழ் ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 25) காலை மகாதானபுரம் ரயில் நிலையத்தில் முன்பு இருந்ததுபோல தமிழ் எழுத்துகளில் மாற்றி பெயர்ப் பலகை திருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நம்மிடையே பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விஜயன்:
'மத்திய பாஜக அரசு பதவி ஏற்றது முதல் தமிழ்நாட்டிலுள்ள இருமொழிக் கொள்கைகளை மாற்றி மும்மொழிக் கொள்கையைத் திணித்துவருகிறது. தற்பொழுது ஒரு படி மேலே சென்று இந்தி மொழிக்கு இணையாக சமஸ்கிருத வார்த்தைகளைத் திணிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது.
தற்போது மகாதானபுரம் ரயில் நிலையத்தில் முன்பு இருந்ததைப் போல தமிழில் பெயர்ப் பலகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இதுபோன்று வடமொழித் திணிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டால் நிச்சயம் களத்தில் இறங்கிப் போராடுவோம். தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கில் செயல்படுவதை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து ராஜேந்திரன் தெரிவிக்கையில், 'கரூர் மாவட்டம் என்பது தமிழ்ப் புலவர்கள் பண்டைய காலத்தில் தமிழ் வளர்த்த நகரமாகும். மதுரைக்கு அடுத்தபடியாக இந்த மாவட்டம்தான் தமிழ் வளர்த்த புலவர்கள் வாழ்ந்த பூமியாகும். இங்கே சமஸ்கிருத மொழித் திணிப்பை மேற்கொண்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என எச்சரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையை நிறுத்துவிட்டு அவசர ஊர்திக்கு வழிவிட்ட முதலமைச்சர்