மத்திய அரசு, விவசாயிகளின் விலையில்லா மின்சாரத்தை ரத்து செய்ய ஆணையிட்டதைக் கண்டித்து கரூரில் பல்வேறு இடங்களில் வர்த்தக அணி, மகளிர் அணி, விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக மாவட்ட மின்சார அலுவலகம் முன்பு, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 'கடந்த ஆறு ஆண்டுகளாக நரேந்திர மோடி உடைய ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான ஆட்சியாக இருக்கிறது.
10 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பாஜக அரசு சாதகமாக செயல்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அந்நிய முதலாளிகளுக்கும் பணம் குவிந்து வருகின்றது. ஆனால், விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தபோதிலும், விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாமல், தற்போது விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் தொடர்ந்து அவர்களுக்கான சலுகைகளை ரத்து செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, விலையில்லா மின்சாரத்தை ரத்து செய்து தொடர்ந்து விவசாயிகளை கைவிட்டுவருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாங்கள், விவசாயிகளை ஒருபோதும் கை விடமாட்டோம்.
விவசாயிகள் நலன் குறித்து போராட்டங்கள் எழுப்புவோம். மேலும், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை ஒவ்வொரு விவசாயிக்கும் உறுதுணையாக இருப்போம். இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. நாங்கள் கடைசிவரை விவசாயிகளுடன் துணை இருப்போம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு துறைகள் தனியார்மயம்: சுகாதாரத் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்