கரூர்: சின்னதாராபுரம் பகுதியில் வசித்து வரும் உமர் முக்தர் (வயது 47), 2021ஆம் ஆண்டு, செப்.7ஆம் தேதி தனது வீட்டின் அருகே வசித்த 4 வயது சிறுமிக்கு பலூன் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் முக்தர்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று (மே31) கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீர்ப்பினை வழங்கினார். அதில், “சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் அபராதமும் ரூபாய் 1000 கட்ட தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.
மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார். தொடர்ந்து, “பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார். வழக்கு பதிவு செய்யப்பட்ட 7 மாதத்தில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் பாலியல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மதுரை விராலிப்பட்டியில் வசித்தபோது இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் வீரசின்னு என்ற பெயரை உமர் முக்தர் (47) என மாற்றிக்கொண்டுள்ளார். மூன்று திருமணங்கள் செய்துகொண்ட உமர் முக்தர் அவர்கள் அனைவரையும் பிரிந்து சின்னதாராபுரம் பகுதியில் குடியேறி கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: எல்.ஆர்.ஜி நாயுடு சுழற்கோப்பையை கைப்பற்றிய இந்திய கடற்படை அணி!