கரூர்: கரூர் புன்னம் சத்திரம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் காங்கேயம்பாளையம் NTC என்ற தனியார் கல்குவாரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று (ஏப்.25) நள்ளிரவு 12 மணி அளவில் டிப்பர் லாரி ஒன்றில் கற்களை ஏற்றிக்கொண்டு சேங்கல் அருகே உள்ள பாப்பையம்பாடி பழனிசாமி மகன் சுப்பையா(41), கல்குவாரியில் கீழ்ப் பகுதியிலிருந்து மேற்புறமாக வாகனத்தைச் செலுத்தி வந்தார்.
அப்பொழுது ஏற்பட்ட திடீர் மண்சரிவு காரணமாக சுமார் 500 டன் கொண்ட ராட்சத பாறை ஒன்று எதிர்பாராதவிதமாக லாரியின் மீது உருண்டு விழுந்தது. இதுகுறித்து கல்குவாரி நிறுவனம் அதிகாலை வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் நேற்று காலை 6 மணியளவில் மீட்புப் பணியைத் துவங்கிய தீயணைப்புத்துறையினர் மதியம் 2 மணி அளவில் கல்குவாரியில் சிக்கித்தவித்த கிட்டாச்சி ஓட்டுநர்கள் கார்த்திக்(23), ராஜ்குமார் (20) என்ற இரு இளைஞர்களை உயிருடன் பத்திரமாக கயிறு கொண்டு மீட்டனர்.
ஆனால் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சுப்பையாவை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பாறையை வெடிவைத்து இரண்டாகப் பிளந்து இயந்திரம் மூலம் லாரியின் முன் பகுதியை அகற்றினர். இதில் உடல் கருகிய நிலையில் லாரி ஓட்டுநர் சுப்பையா மீட்கப்பட்டார்.
இறந்தவரின் உறவினர்கள் போராட்டம்: இதனிடையே கல்குவாரியில் மீட்கப்பட்ட உடலை போலீசார் உடற்கூராய்வு பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால் உயிரிழந்த சுப்பையாவின் உறவினர்கள் உரிய இழப்பீடு வழங்கக் கல்குவாரி நிறுவனம் உறுதி அளிக்கக் கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் முத்து தமிழ்ச்செல்வன் மற்றும் பரமத்தி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த லாரி ஓட்டுநர் சுப்பையா என்பவருக்கு உமாதேவி (35) என்ற மனைவியும் காயத்ரி(10), திவ்யா (6), மதியழகன் (9) என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதாகக் கல்குவாரி நிறுவனம் தெரிவித்தால் மாலை 5 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனைத்தொடர்ந்து உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளக் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கரூர் பகுதியில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளால் அடிக்கடி பாறைகள் உருண்டு விபத்துக்கள் நடைபெறுவதால் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மின்சார ரயில் விபத்து: ‘ப்ரேக்கிற்கு பதில் ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டேன்’ - ஓட்டுநர் விளக்கம்?