கரூர் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அசோகன் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "கரூர் மாவட்டத்தை பொருத்தவரையில், கடந்த ஒரு வாரமாக 200க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட போது, கரோனா தொற்று முதல் அலை அதிக அளவில் இருந்தது. அதற்காக 300 படுக்கைகள் கொண்ட கரோனா பிரிவு தொடங்கி சிகிச்சை அளித்து வந்தோம்.
தற்போது இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலான விஷயமாக மருத்துவமனைகளுக்கு உள்ளது. ஆனால், கரூரில் இதை எதிர்கொள்ளும் விதமாக 150 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன. நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தேக்க தொட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், அதிகபட்சமாக 3 ஆயிரம் லிட்டர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுவதை கண்டறிய தனி குழு அமைக்கப்பட்டு வெளி மாவட்ட உற்பத்தி நிலையங்களிலிருந்து தேவைக்கேற்ப கொண்டு வரப்படுகிறது. மேலும் கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் திரவ வடிவில் ஆக்சிஜன் தயாரித்து அதை உருளைகளில் நிரப்பி வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
கரூர் மருத்துவக்கல்லூரி கட்டுப்பாட்டில் உள்ள 130 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமன்றி, கரூர் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மேற்பார்வையில் குளித்தலை தலைமை அரசு மருத்துவமனை, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை, மண்மங்கலம் அரசு மருத்துவமனைகளில் சுமார் 400 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர கரோனா சிறப்பு சிகிச்சை மையம், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, புலியூர் செட்டிநாடு அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் சுமார் 1500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தற்போது இரண்டாம் அலை தீவிரத்தை உணர்ந்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால் நோயின் தீவிரத் தன்மை குறைய தொடங்கும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறையும். மிக விரைவில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும்" என்றார்.
கரோனா நோயாளிகள் இறப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவது குறித்த செய்தியாளர் கேள்விக்கு ,"சாதாரண காய்ச்சல் என்று அவர்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் நோயின் தீவிரம் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. காய்ச்சல் அறிகுறி தொடங்கிய முதல் வாரத்தில் ஆரம்ப கட்ட சிகிச்சை அளிக்கிறோம். மாறாக மக்கள் தாங்களாகவே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொழுது, இரண்டாவது வாரத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து மூச்சுத் திணறல், நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் சரியான சிகிச்சை முறையை தற்பொழுது அளித்து வருகிறோம். மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டால் கரோனாவை விரட்டி அடிக்கலாம்.
கரூரில் தடுப்பு மருந்துகள் போதுமான அளவு இருக்கிறதா என்ற கேள்விக்கு , ரெம்டிசிவர் மருந்து முதல் வாரத்தில் அளிக்கக்கூடிய மருந்து. கரூர் மாவட்டத்தில் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது இருப்பு சரிபார்க்கப்பட்டு தேவையான அளவு மருந்துகள் வாங்கப்படுகின்றன. ஆக்சிஜனை பொருத்தவரையில் தட்டுபாடு இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமாக வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு , கடந்த ஆண்டு 500 பேர் வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது நாளொன்றுக்கு 1500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்கிறோம். மற்ற மருத்துவ கல்லூரிகளில் சோதனை முடிவுகள் வழங்கப்படுவதை காட்டிலும் மிக விரைவாக வழங்கப்பட்டு வருகிறது" என கூறினார்.
இதையும் படிங்க: கரோனா வார்டில் சுகாதாரக் கேடு: நோயாளிகளுக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்து வரும் அவலம்