கரூர்: மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் குளித்தலை நகர செயலாளராகவும் தற்போது குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ள மாணிக்கம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராசம்மாள் என்பவருக்குத் தர வேண்டிய ரூ.10 லட்சத்திற்குக் காசோலை கொடுத்துள்ளார்.
இதனிடையே மாணிக்கம் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியதால் ராசம்மாள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடிவெடுத்தார். இது தொடர்பாக கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் காசோலை தொடர்பான விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் மாணிக்கம் ஆஜர் ஆகவில்லை.
இந்நிலையில் 4- வது முறையாக நேற்று பிப்.23 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து ஆஜர் ஆகாததால் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் விரைவு நீதிமன்றம் நீதிபதி சரவணன்பாபு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக குளித்தலை திமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது, சட்டப்பேரவை உறுப்பினர் தற்போது சென்னையில் இருப்பதால் நேற்று நடைபெற்ற விசாரணையில் ஆஜராகவில்லை என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் ராணுவ நடவடிக்கை - புதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு