கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவர்கள், திரையரங்க பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூறுகையில், ”கொரோனா தடுப்பு தொடர்பாக, தமிழ்நாடு அரசும், சுகாதாரத் துறையும் துரிதமாக செயல்பட்டுவருகிறது. கரூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மையப் பகுதிகளில் ஒன்றாக இருப்பதால், இதுவரை கரூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.
கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் 34 பேர் கொரோனா தொடர்பாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 24 பேருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என பரிசோதனைக்கு பின்பு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், 10 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுவருகின்றது. அவர்களுக்கும் தொற்று இருக்க 100 விழுக்காடு வாய்ப்பில்லை.
ஒருவருக்கு மட்டும் தனி பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவருக்கும் சிகிச்சைக்கான பரிசோதனைச் சான்றிதழ் தேனி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பள்ளிக் கூடங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்றார்.