நாடு முழுவதும் இன்று (ஆக.15) 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாகப் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து நிகழ்ச்சிகள் மிக எளிமையாக நடைபெறுகின்றன.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், தேசிய கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாவினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் இருவரும் இணைந்து பறக்க விட்டனர்.
நிகழ்ச்சியில் இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அலுவலர்கள், அரசு அலுவலகங்களுக்குப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
அத்தோடு 'கரோனா இல்லாத கரூர்' என்ற தலைப்பில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறை, வருவாய் துறை அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து இலவச வீட்டு மனை பட்டா, விவசாயிகளுக்கு இடுபொருள்கள், மகளிருக்கு சுழல் நிதி என 1 கோடியே 26 லட்சத்து 77 ஆயிரத்து 357 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: 'நிதிச்சுமையிலும் மக்களை காக்கத் தயங்கவில்லை' - மு.க.ஸ்டாலின்