கரூர் மாவட்டத்தில் தாந்தோணி மலைப் பகுதியில் அமைந்துள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டின் தென் திருப்பதி என மக்களால் அழைக்கப்பட்டுவருகிறது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
தற்பொழுது பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக திருவிழாவை நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் அவர் கூறும் பொழுது, "தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே திருவிழா நடத்தப்படும். பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாமி தரிசனத்திற்கு பொதுமக்கள் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவர். தரிசனம் செய்யவரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடித்து கோயிலுக்குள் வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் நுழையக் கூடிய மூன்று முறைவாயில்களிலும் சுகாதாரத் துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு வரக்கூடிய பொதுமக்கள் அனைவரும் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுவர்.
பொதுமக்கள் தேங்காய், பூ, பழம், துளசி உள்ளிட்டவைகளை எடுத்துவருவதைத் தவிர்க்க வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சர்க்கரை நோய் உடையவர்கள், சுவாசம் தொடர்பான நோய் உடையவர்கள், இதய நோய் உடையவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்குள்பட்ட குழந்தைகள் ஆகியோர் கோயிலுக்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.