17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆறு லட்சத்து 95 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரை இரண்டு லட்சத்து 75 ஆயிரத்து 151 வாக்குகளே பெற்றார். இதனால், ஜோதிமணி நான்கு லட்சத்து 20 ஆயிரம் 546 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் முன்னிலையில், கரூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
"கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைத் தந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் மக்களவைத் தொகுதியில் முதல் பெண் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருக்கிறேன். தேர்தலில் தந்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்" என்றார்.