கரூர்: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
அங்கு அவர் குளித்தலை, சித்தலவாய் பேருந்து நிறுத்தம், கரூர் லைட்ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட மூன்று இடங்களில் பரப்புரையை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கரூர் வாங்கல் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் மாவட்ட விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில், இருந்த காலி இருக்கைகளையும், நிகழ்ச்சி முடியும் முன்னரே அங்கு வரவேற்பிற்காக கட்டப்பட்டிருந்த வாழை மரங்களிலிருந்த வாழைத் தார்களை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றதையும் தனியார் நிறுவன செய்தியாளர் புகைப்படம் எடுத்தார். இதையடுத்து அவரை அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியான நவலடி கார்த்தி என்பவர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, முதலமைச்சர் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்புறம் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் மீதும் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன.
இதனைக் கண்டித்து செய்தியாளர்கள் அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கும் பணியினைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செய்தியாளர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் ஏற மறுத்து, பின்னர் நான்கு சக்கர சரக்கு வாகனம் மூலம் கரூர் வந்தடைந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா உள்ளிட்டோர் முன்பு செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.