கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர், பிச்சைமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி (65) எனும் மூதாட்டி. இவர் அதேபகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார்.
நேற்று (செப்.4 ) வழக்கம்போல் வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு மூதாட்டி நடந்து சென்றபோது, அவரது வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, எதிரே நடந்து சென்ற ஒரு இளைஞர் மீண்டும் திரும்பி நடந்து வந்தார். பின் மூதாட்டியின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு வேகமாக ஓடி, ஏற்கெனவே தயாராக இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த இளைஞரின் வாகனத்தில் பின்னால் அமர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் தப்பித்துச்சென்றனர்.
கூச்சலிட்ட மூதாட்டியின் சத்தம் கேட்டு வந்தவர்கள், மூதாட்டியிடம் விசாரித்த போது அது கவரிங் செயின் எனக் கூறியதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளைக்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களைத்தேடி வருகின்றனர். பட்டப்பகலில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் மூதாட்டியிடம் செயின்பறிப்பு சம்பவம் நடந்தது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இப்பகுதிகளில் இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், பகலில் தனியாக வெளியில் செல்வதையும், தனியாக நடந்து அல்லது இரு சக்கர வாகனங்களில் செல்லும்போதும் தங்க நகைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:திண்டுக்கல்லில் ஹோட்டலுக்குள் புகுந்த அரசு பேருந்து... 2 பேர் உயிரிழப்பு...