கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்கள், எலக்ட்ரிஷன், தச்சர், பிட்டர் என சுமார் 260 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாதச் சம்பளம், இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்களுடை வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகக் கூறி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் துப்புரவுப் பணிகளை செய்வதால் உணவகத்தில் தங்களை வித்தியாசமாக பார்ப்பதாக குற்றச்சாட்டினர். இவர்களின் போராட்டத்தால் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பணிகள் பாதிப்படைந்தன. அவர்களிடம் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரும், தனியார் ஒப்பந்தராரர், மேலாளர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பணிக்கு திரும்பினர்.
இதையும் படிங்க: கரோனா: மூடப்படும் தலைநகரின் எல்லைகள்!