கரூர்: கல்வித்துறை நிர்வாக செயல்பாட்டுக்காக கரூர், குளித்தலை என இரண்டாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குளித்தலை நகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 603 மாணவர்கள் படித்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 167 மாணவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர்.
இவற்றில் ஆங்கில வழி கல்வியில் படித்த 49 மாணவர்களும் அடங்குவர். அங்கு மேல்நிலை கல்வியில் பதினொன்றாம் வகுப்பில் ஆங்கில வழி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதற்காக அங்கு உள்ள பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பலமுறை மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
தலைமை ஆசிரியரின் அலட்சியம்: முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில் பள்ளித் தலைமை ஆசிரியர் நடவடிக்கையை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படும், என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் பெற்றோரில் ஒருவர் அளித்த புகாருக்கு பதில் அனுப்பியுள்ளார்.
ஆனால் அங்குள்ள தலைமை ஆசிரியர் ஆறுமுகம், அதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகள் சம்பந்தமாக முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை அளித்து வருகிறார்.
தனியார் பள்ளிக்கு உதவி:
இது குறித்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரகுமான் கூறுகையில், "130 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளித்தலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வி மாணவர்கள் தேர்ச்சி பெற்று, இதே பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி இல்லாததால், அருகாமையிலுள்ள கிருஷ்ணராயபுரம் அரசுப் பள்ளிக்கும், திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி மற்றும் திருச்செந்தூரை அரசு பள்ளிகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்பள்ளியில் படிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்தலை பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புற மாணவர்கள் தான். ஆனால் மாணவர்கள் நலன் கருதி அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆங்கில வழி பாடப்பிரிவை தொடங்காமல் அருகாமையில் உள்ள தனியார் பள்ளிகள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
முற்றுகையிடும் போராட்டம்: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இரண்டு தினங்கள் கடந்த நிலையில் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில் கடந்த ஆண்டு மாணவர்கள் யாரும் ஆங்கில வழியில் சேர ஆர்வம் காட்டவில்லை எனத் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஆங்கில வழியில் சேர விருப்பமாக இருந்தாலும் பள்ளியில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படாத பின்னணியில் பள்ளி தலைமை ஆசிரியர் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் நடப்பு ஆண்டில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படாவிட்டால் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலகத்தை பெற்றோர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு: அரசு ஊதியத்தில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் தனியார் பள்ளிகள் அளிக்கும் ஊக்கத் தொகைக்கு ஆசைப்பட்டு ஏழை, எளிய மாணவர்களின் நலனை புறக்கணிக்கிறார் என்பது அங்குள்ள பெற்றோர்களின் கொந்தளிப்பாக உள்ளது. இது குறித்து பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஆறுமுகம் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நமது அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
கரூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களை யும் பொதுமக்களின் கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றுவதில் சிறப்பாக செயல்படும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் நலன் காக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர கட் ஆப் 33 மதிப்பெண் வரை குறையலாம் - கல்வி ஆலோசகர் அஸ்வின்