கரூர்: குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் குருபிரகாஷ் (19). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். குருபிரகாஷும் அதே கல்லூரியில் படித்து வரும் கல்லுரி மாணவி ஒருவரும் கடந்த ஆறு மாதங்களாக முன்னர் காதலித்து வந்துள்ளானர்.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த கல்லூரி மாணவி வேறு ஒரு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், குருபிரகாஷ், அந்த மாணவிக்கு போன் செய்து மீண்டும் தன்னை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்திற்கு மேல் இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி, ஆட்டோ டிரைவர் அருண்குமாரிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று குருபிரகாஷுக்கும், ஆட்டோ டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 18 ஆம் தேதி (நேற்று) மதியம் கல்லூரிக்கு செல்வதற்காக, குருபிரகாஷ் அய்யர்மலை கடைவீதி அருகே வை.புதூரில் ஐடிஐ படித்து வரும் குருபிரகாஷின் பெரியப்பா மகன் விக்னேஷ்வரன் உள்ளிட்ட சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் மற்றும் கல்லூரி மாணவர் செல்லதுரை உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் குருபிரகாஷை கீழே தள்ளிவிட்டு அடித்து உதைத்துள்ளனர். அதனைத்தடுக்க வந்த விக்னேஷ்வரனையும், கல் மற்றும் குச்சியாலும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடியதால் அங்கிருந்து அந்த கும்பல் தப்பித்து ஓடியதாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் காயம்பட்ட குருபிரகாஷ், விக்னேஷ்வரன் இருவரையும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் தலையில் பலத்த ரத்த காயம்பட்ட விக்னேஷ்வரன், நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி விக்னேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இந்த மோதல் சம்பவம் குறித்து குளித்தலை காவல்துறையினர் வழக்குப் பதிந்து குளித்தலை கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார், கல்லூரி மாணவர்களான வீரக்குமாரன்பட்டியை சேர்ந்த செல்லதுரை, கண்டியூரை சேர்ந்த விஜய், வை.புதூரை சேர்ந்த சரவணன் ஆகிய 4 பேரை இன்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறில் சகோதரனை காப்பாற்றச்சென்ற ஐடிஐ கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கைதிகள் பல் பிடுங்கிய விவகாரத்தில் அதிரடியில் இறங்கிய அமுதா ஐஏஎஸ்!