கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணை உள்ளது. அந்த அணையின் மூலம் விஸ்வநாதபுரி, அப்பிபாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட 20க்கும் மேலான கிராமங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அப்படியே அமராவதி ஆற்றில் விடுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அழகாபுரி அணையில் இருந்து வெளியேறும் இந்த கழிவு நீரானது கரூர், செட்டிப்பாளையம் கதவணைப் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நுரை பொங்க காட்சியளிப்பதோடு, மாசுபட்ட தண்ணீராக நிறம் மாறி இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இது தொடர்பாக புகைப்பட ஆதாரங்களைக் கொண்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் மனுவை வழங்கினார். இந்நிகழ்வின்போது, ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி சேகர், மாவட்ட அதிமுக ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிமுக கரூர் மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதற்கு எதிராக அக்டோபர் 2ஆம் தேதி கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி சேகர் மற்றும் ஊர் பொதுமக்களுடன் புகார் மனுவை வழங்கியுள்ளனர்.
கழிவுநீர் கலந்த தண்ணீரை பயன்படுத்தியதால், அப்பகுதி பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. குடிநீரை குடிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமான தீர்வுகளை அதிகாரிகள் நாடாமல், நிரந்தரமாக அமராவதி குடகனாறு ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததால், கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். தற்போது பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் மெத்தனமாக நடந்து கொண்டால், கரூரில் அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் சட்ட ரீதியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடுவோம்" என தெரிவித்தார்.