கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காகவும் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் பறக்கும் படையினர் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அதன்படி, அரவக்குறிச்சி தொகுதிக்கு 6 குழுவாகவும், கிருஷ்ணராயபுரம் குளித்தலை தொகுதிகளுக்கு தலா மூன்று குழுவாகவும் பிரிந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல், ஆறு நிலையான கண்காணிப்புக் குழுவும், காணொலிக் கண்காணிப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இன்று (மார்ச்3) அதிகாலை 5 மணியளவில் கரூர் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரமத்தி அருகே தென்னிலை சாலையில் வந்த காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, வடிவேல் என்பவர் 2 லட்சத்து 93 ஆயிரத்து 300 ரூபாயை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கண்காணிப்புக் குழு அலுவலர் முருகன் தலைமையிலான குழு பணத்தைக் கைப்பற்றி அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். ஆனால், காரில் வந்தவர்கள் சேலம் மாவட்டம் மேச்சேரியில் ஆடு வாங்க பணம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை!