மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழை நீர், திருப்பூர் மாவட்டம் சின்ன முத்தூரில் உள்ள நொய்யல் ஆற்றின் வழியே சென்று காவிரியுடன் கலந்து வந்தது. இதை பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992ஆம் ஆண்டு 13 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது.
இதிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பக்கவுண்டன்வலசு நீர்தேக்கத்துக்கு சென்று நிரம்பிய பின்னர், பாசன கால்வாய் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சாயக்கழிவு பிரச்னையால் அந்த நீர்தேக்கத்துக்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு விவசாயிகளின் முயற்சியால் நொய்யல் ஆற்றில் செல்லும் மழை நீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நொய்யல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதால் வெள்ள நீர் ஆற்றில் செல்கிறது. கரூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இரண்டாவது ஆண்டாக குப்பகவுண்டன்வலசு நீர்தேக்கத்துக்கு வினாடிக்கு 290 கனஅடி வீதம் சின்ன முத்தூர் தடுப்பணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.