கரூர்: தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணியளவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகம் முன்பாக கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (டிச.17) ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் விசுவநாதன், மாநில பொருளாளர் ரமேஷ் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும் அரசுக்கு எதிராகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாய சங்கத்தினர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை காவல் துறையினர், தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப்போராட்டத்தில் 10 பெண்கள் உள்பட 94 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தாராபுரம் சிவகுமார், “கடந்த ஆட்சி காலத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து கடந்த ஆட்சியாளர்களிடம் சிறிது சிறிதாக இழப்பீட்டை அதிகரித்து பெற்றோம். இதனிடையே விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் போது முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
திமுக அதனை தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டது. திமுக தயாரித்த தேர்தல் அறிக்கை குழுவில் விவசாய சங்கங்கள் சார்பில் எங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்தோம்.ஆனால் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை கரூர் உள்ளிட்ட இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட முறை சந்தித்தபோது பேச மறுத்துவிட்டார்.
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், திமுக அரசு எங்களது ஆசையில் மண்ணை அள்ளி வீசி விட்டது. விவசாயிகளுக்கு இருப்பதே நிலம் ஒன்று தான். அதனை பிடுங்கி விட்டால் சாலையில் தான் நிற்கதியாய் நிற்கவேண்டும் என்ற நிலை ஏற்படும் என்பதால் இன்று சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் மீட்பு