கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஜேசிஐ டைமண்ட் இளைஞர் பாசறை அமைப்பின் 19ஆவது பதவியேற்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில், பங்கேற்ற அவருக்கு பொன்னாடைகள் போர்த்தி நினைவு பரிசுகளை ஜேசிஐ அமைப்பினர் வழங்கினர். நிகழ்வில் மயில்சாமி அண்ணாதுரையின் ஓவியத்தை அவருக்கு தனியார் பள்ளி மாணவன் ஜெசிந் பரிசாக வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை, "2022இல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் முன்னோடிதான் ககன்யான் திட்டம். இத்திட்டத்தில் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன், முதலில் மனிதனை போன்ற ரோபோவை விண்ணுக்கு அனுப்பி பத்திரமாக பூமிக்கு அழைத்துவருவோம். அத்திட்டம் வெற்றிபெற்ற பிறகு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.
விண்வெளிக்கு தொடர்ந்து பல்வேறு ராக்கெட்டுகளை அனுப்பும் திட்டங்களை செயல்படுத்திவரும் இஸ்ரோ மண்ணுக்குள் (போர்வெல்களில்) விழும் குழந்தைகளை மீட்க புதிதாக கண்டுபிடிப்புகளை உருவாக்குமா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "அது போன்ற திட்டம் உள்ளது. கடந்த முறை அந்த கருவிகள் பயன்படுத்த முடியால் போய்விட்டது.
இருந்தபோதும் பயனில்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டியது முக்கியம். இதற்கு அரசும் நல்ல ஒத்துழைப்பு வழங்கிவருகிறது. எனவே தனி மனிதர் ஒவ்வொருவரும் இதுபோன்ற மூடப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை அரசுக்குத் தெரியபடுத்த வேண்டும். விரைவில் இந்த பிரச்னைக்கு புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கனிமொழி எம்பி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு