கரூர்: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தனியார் திருமண மண்டபத்தில் இன்று (பிப் 11) பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் “திமுக, இந்த தேர்தலை தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தது, முடியவில்லை. உச்ச நீதிமன்ற ஆணையின் காரணமாக வேறு வழியின்றி தேர்தலை நடத்துகிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் செந்தில்பாலாஜி எந்த கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. அது அவருக்கே தெரியாது.
தமிழ்நாடு காவல் துறை திமுக அரசின் கைப்பாவையாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்கள் வாக்களிப்பவரே ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். செந்தில் பாலாஜி பணத்தை கொடுத்து ஒவ்வொருவரையும் விலைக்கு வாங்கி வருகிறார். இந்தப் பிழைப்பு தேவையா?
நேரடியாக அரசியல் ரீதியாக மோதிப் பார்க்க வேண்டும். மிரட்டல் விடுத்து திமுகவிற்குள் ஒவ்வொருவரையும் இழுத்து வருகின்றனர். ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக பேசப்பட்ட தமிழ்நாடு காவல்துறை இன்று இல்லாமல் போய்விட்டது. 2024ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வரவுள்ளது. குறிப்பாக 27 அமாவாசை தான் உள்ளது. ஆட்சி மாறும்போது காட்சிகள் மாறும். 30 ஆண்டுகாலம் பல சோதனைகளை கடந்து அதிமுக ஆட்சியில் இருந்தது.
முதலமைச்சர் பதிவியும், அமைச்சர் பதவியும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்குதான். இவர்கள் கொள்ளை அடிக்க பயன்படுத்துகிறார்கள். இப்போது செந்தில்பாலாஜி மீது கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள்தான் அமைச்சராக இருப்பார்.
கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் என்று திமுக வாரிசு அரசியல் நடத்துகிறது. இப்போது உதயநிதி வந்துள்ளார். அதிமுக தொண்டர்கள் கடைசிவரை உறுதியுடன் இருப்பர். சாதாரண தொண்டன் கூட இங்கு முதல்வராகலாம். திமுக அரசை தூக்கி பிடிப்பது ஊடகம்தான். கரூர் மாவட்டத்திற்கு இந்த அரசு 9 மாதமாக ஒன்றும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி நாங்கள் வாக்கு சேகரிக்க உள்ளோம். திமுக எந்த சாதனையை சொல்லி வாக்கு சேகரிக்க போகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக ஈசிஆர்-ல் சைக்கிளில் போகிறார். டீ குடிக்கிறார். முதன்மை முதலமைச்சர் என்று இவரே சொல்கிறார். பொய் பேசுவதில்தான் நம்பர் 1ஆக இருக்கிறார். நாட்டு மக்களுக்கு பல பிரச்சினை உள்ளது. ஆனால், ஸ்டாலின் விளம்பரபிரியராக உள்ளார். 2021 சட்டப் பேரவைதேர்தலின் போது 501 வாக்குறுதிகளை கொடுக்கப்பட்டன. சில காரியங்களை மட்டுமே செய்துள்ளனர்.
கரூரில் உதயநிதியிடம் பெண்கள் 1000 ரூபாய் உரிமைத்தொகை எங்கு என்ற கேள்விக்கு இன்னும் 4 வருடம் உள்ளது என்று பேசினார். நாமம்தான் மிஞ்சும். தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை இதுவரை குறைக்கவில்லை. ஆட்சிக்கு முன்பு ஒரு பேச்சு. பின்பு ஒரு பேச்சு. திமுக தேர்தல் அறிக்கையில் தங்கநகை 5 சவரன் நகைக்கடன் ரத்து என்றார்கள். 48 லட்சம் பேரில், 13 லட்சம் பேர்தான் தகுதியானவர் என்று சொல்லி விட்டனர். மீதி உள்ளவர்கள் நிலை பரிதாப நிலையில் உள்ளனர். மீதீயுள்ள 35 லட்சம் பேர் எப்போதும் திமுகவை மறக்க மாட்டார்கள்.
பொங்கல் பரிசு திட்டத்தை அம்மா துவங்கினார். சிறப்பாக தொடர்ந்து கொடுத்து வந்தோம். கடந்த முறை 2500 ரூபாய் கொடுத்தோம். திமுக அரசு 21 பொருள் என்று சொல்லி 16 பொருள்தான் கொடுத்தனர். துணி பையும் தரவில்லை. தரமும் இல்லை. 500 கோடி ஊழல் செய்துள்ளனர். சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறுகிறது. பொங்கல் தொகுப்பு பற்றி பேசியவருக்கு பிணை இல்லாத வழக்கு போட்டனர்.
கொள்ளை அடிப்பதையே பிராதான தொழிலாக கொண்டுள்ளனர். இந்த தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். நான் கொண்டுவந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் கரூரில் 6 பேர் மருத்துவராக உள்ளனர். இதுவரை 541 ஏழை மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக இளைஞர் அணித் தலைவர் வினோஜ் ட்விட் பதிவு தொடர்பான வழக்கு : கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு