கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று (ஜன.3) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், ஒரு வார காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகிலன் தலைமையில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மனு அளித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இயற்கை வளமான மலைகளை அழித்து தயாரிக்கப்படும் எம்சாண்ட் தரமற்ற முறையில் கட்டுமான பொருள்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அரசு காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை அமைப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆற்று மணலை பாதுகாக்கக் கோரி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் அமைப்பதற்கு பதிலாக, வெளிநாட்டிலுள்ள இயற்கை மணலை இறக்குமதி செய்ய வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள தரமற்ற எம் சாண்ட் மணல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: புறம்போக்கு நிலத்திற்குத் தகராறு: ஐடி பெண் ஊழியர் கொலை