கரூர்: இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகரில் அமைந்துள்ள ஈத்கா பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று (ஏப்.30) ம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக சொன்னவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தன்னுடைய வீட்டில் 2 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதாக அவதூறு பரப்புகிறார். அவருடைய வீட்டிற்கு 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள கந்தப்பட்டி துணை மின் நிலையத்தில், புதிததாக கூடுதல் மின் மாற்றி அமைப்பதற்காக முறையாக அறிவிக்கப்பட்டு 2 மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்பட்டது.
அதற்காகவே இந்த நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டது. நேரம் இருந்தால் அதை நேரடியாக சென்று தெரிந்து கொண்டு பொறுப்புடன் எதிர்க்கட்சித்தலைவர் பேச வேண்டும். கூடுதலாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளதா, மின் விநியோகத்திற்கான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை நேரடியாக சென்று சரி பார்த்துவிட்டு எதிர்க்கட்சித்தலைவர் பார்க்க வேண்டும். ஒரு அரசை பற்றி குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்பதற்காக அவதூறு பரப்புவது ஏற்புடையதல்ல.
கடந்த ஒரு ஆண்டில் 44,000 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சரை பொறுத்தவரை சீரான மின் விநியோகம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது உத்தரவு. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தோழமைக்கட்சியான பாஜக ஆளும் மாநிலங்களில், எந்தெந்த மாநிலங்களில் முறையாக அறிவிக்கப்பட்ட பின்னர் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது... நிலக்கரி பற்றாக்குறை எவ்வளவு உள்ளது.. என்பதை திரும்பிப் பார்த்த பின்னர் தமிழ்நாட்டினைப் பற்றி பேச வேண்டும். மக்களிடத்தில் பேச வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு