கரூர்: மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மறைமுக தேர்தல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி கடைசி நேரத்தில் 5வது முறை தள்ளிவைக்கபட்டதால் சம பலம் உள்ள அதிமுக உறுப்பினர்கள் கூட்ட அரங்கின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவி துணைத் தலைவர் பதவியை அதிமுக கைவசம் வைத்திருந்தது.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துக்குமார், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டதன் காரணமாக கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதன் பிறகு அவ்விடத்திற்கு உள்ளாட்சி இடைத்தேர்தலின் போது தேர்தல் நடைபெற்ற போது அதிமுக சார்பில் மீண்டும் முத்துக்குமார் போட்டியிட்டபோதும் திமுக சார்பில் நிறுத்தப்பட்ட, கண்ணையன் வெற்றி பெற்றார்.
இதனிடையே மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 12-இல் 6 அதிமுக வசம், 6 திமுக வசம் என சமநிலையில் உள்ள நிலையில், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் போதிய உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தினால் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மதியம் 2:30 மணியளவில் மீண்டும் மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்திற்கு நவம்பர் 11ஆம் தேதி வருகை தர உள்ளார்.
பாதுகாப்பு பணிகள் மிகவிரிவாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ள இருப்பதாலும், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு இடையே மோதல் ஏற்படக்கூடும் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை கருத்தில் கொண்டு, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் மீண்டும் ஐந்தாவது முறையாக மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மறைமுக தேர்தல் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கண்ணதாசன் தலைமையில் உறுப்பினர்கள் ஐந்து பேர் மறைமுக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்ட அரங்கம் முன்பு அமர்ந்த சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இதனிடையே கூட்டம் நடைபெறுவதாக இருந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தான் காரணம் எனவும், நீதிமன்றம் மூலம் மறைமுக தேர்தலை நடத்த கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இம்முறை மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களை மிரட்டி, திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க கடந்த இரண்டு நாட்களாக பொய் வழக்குகள் போட்டு காவல்துறையை ஏவி விட்டு, திமுகவினர் கரூர் மாவட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பள்ளி தோழனை தேடி வந்த மாஜி துணை ஜனாதிபதி.. சென்னையில் நடந்தது என்ன?