கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சேடப்பட்டி நெய்தலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு காத்தான் (45), சுப்பிரமணி (40), கந்தசாமி (35) என மூன்று மகன்கள் உள்ளனர். இவருக்குச் சொந்தமான 3 1/2 ஏக்கர் வேளாண் நிலத்தை கடைசி மகன் கந்தசாமி உழுது விவசாயம் செய்துவந்ததாகத் தெரிகிறது.
இந்நிலத்தை கந்தசாமியின் உடன்பிறந்த அண்ணன்கள் காத்தான், சுப்பிரமணி ஆகியோர் தங்களுக்குப் பிரித்து தரும்படி கூறிய நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமான வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த நிலத்தில் யாரும் சாகுபடி செய்யாத நிலையில் கந்தசாமி மட்டும் நிலத்தில் நெல் பயிரிட்டு கடந்த மூன்று மாதங்களாக சாகுபடி செய்துவந்துள்ளார்.
இதனிடையே நேற்று (பிப். 14) அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. அப்போது அங்குவந்த காத்தான், சுப்பிரமணி ஆகிய இருவரும் கந்தசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது, அறுவடை நிலத்தில் கிடந்த கதிரறுக்கும் அரிவாளால் கந்தசாமியை சுப்பிரமணியம் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் துறையினர், கந்தசாமியின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலைசெய்யப்பட்ட கந்தசாமிக்கு மாரியாயி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சுப்பிரமணி, காத்தான் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை