கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரத்தின், முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. உழைக்கின்ற அனைவருக்கும் அதிமுகவில் உயர் பதவி கிடைக்கும். இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விளம்பரப் பிரியராக உள்ளார். அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் நேரத்தை செலவிட்டு வருகிறார்” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக அடிக்கல் நாட்டி வருகிறது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு திமுக பெயர் சூட்டி வருகிறது. 11 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. தாலிக்கு தங்கம், மகளிருக்கு இரு சக்கர வாகனம் போன்ற அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தி வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: நீட் மசோதாவை ஆளுநர் விரைவில் ஜனாதிபதிக்கு அனுப்புவார் - அமைச்சர் மா. சுப்ரமணியன்