கரூர்: கரூர் லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன் (60). போக்குவரத்துத்துறை பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மண்மங்கலம் புது காளியம்மன் ஆலயத்தில், தீக்குளித்து உயிரை காணிக்கையாக செலுத்துவதாக பிரார்த்தனை செய்துள்ளார்.
அவரின் வேண்டுதல் போலவே திமுகவும் வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நல்ல நாள் பார்த்து உலகநாதன் காத்திருந்தார்.
இந்நிலையில் ஆனி அம்மாவாசையான இன்று (ஜூலை 9) கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு உலகநாதன் வெளியே சென்றுள்ளார்.
பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிரிழப்பு
பின்னர் காலை 11 மணி அளவில் மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவிலுக்குள், பெட்ரோல் கேனுடன் நுழைந்துள்ளார். கோவிலை வலம் வந்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கு பணியிலிருந்த கோவில் ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டும் பயனில்லாமல், உடல் முழுவதும் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாங்கல் காவல்துறையினர், உலகநாதன் கைப்பட எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
செந்தில் பாலாஜி வெற்றி பெற வேண்டுதல்
அவர் எழுதிய கடிதத்தில், ”சட்டபேரவைத் தேர்தல் அறிவித்த உடனேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என எண்ணியிருந்தேன். கரூர் தொகுதியில் மாவட்ட செயலாளர் வி. செந்தில் பாலாஜி வெற்றி வாகை சூடி அமைச்சராக வேண்டும் என மண்மங்கலம் காளியம்மன் கோயிலில் வேண்டுதல் வைத்திருந்தேன்.
துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீரைப் பார்த்து மகிழ்ச்சி
எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினை தரம் தாழ்ந்து பேசியது, மின்வெட்டு குறித்த விளம்பரம் ஆகியவற்றை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பியும் திமுகவே வெற்றி பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அறுதிப் பெரும்பான்மையோடு, பதவி ஏற்றதை பார்த்த அண்ணியார் துர்கா ஸ்டாலின், ஆனந்தக் கண்ணீர் வடித்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
சுயநினைவுடன் உயிரிழப்பு
பதவியேற்பு சமயத்தில் கோவிட் - 19 தொற்று, 30 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. அதனால் தொற்று குறைந்து அனைவரும் நலமடைந்த பிறகு, என் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம் என காத்திருந்தேன். நான் காளியின் அருள் பெற்றவன். நான் சொல்வது நடந்துகொண்டே இருக்கும். நான் செய்த வேண்டுதல் நிறைவேறியதால், சுயநினைவுடன் உயிரிழப்பை தேடுகிறேன்.
இறுதி ஆசை
மேலும் எனது இரண்டாவது மகன் விழுப்புரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலராக நல்ல முறையில் பணியாற்றி வருகிறான். அவனை கரூர் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நேரடி பார்வையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே எனது இறுதி ஆசை.
போக்குவரத்துத்துறை நண்பர்கள், அலுவலர்கள், என் உறவினர்கள், திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வி.செந்தில் பாலாஜி ஆகியோருக்கு கோடான கோடி நன்றி” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்
இது தொடர்பான செய்தியைக் கண்ட நெட்டிசன்கள், முதியவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தான் வேண்டிக் கொண்டதாலேயே திமுக வெற்றி பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனறும், தற்கொலை செய்து கொண்டது முட்டாள்தன முடிவு எனவும் விமர்சித்து உள்ளனர்.
செந்தில்பாலாஜியின் குலதெய்வக் கோவில்
ஏற்கனவே திமுக வெற்றி பெற்றதற்காக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த வனிதா, நாக்கை அறுத்து பரமக்குடி முத்தாலம்மன் கோயில் உண்டியலில் நேர்த்திக்கடன் செலுத்தி ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்தே தற்போது கரூரிலும் அதே பாணியில் உயிரிழப்பு அரங்கேறியுள்ளது. சம்பவம் நடைபெற்ற கோவில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் குலதெய்வ கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பதவிக்காக அல்ல கொள்கைக்காக திமுகவில் இணைந்தேன் - மகேந்திரன்