கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மத்திய அரசு அலுவலர்கள் தலைமையில் ஜல் சக்தி அபியான் திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி, குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசுகையில், ஒவ்வொரு முறையும் அமராவதி ஆற்றிலிருந்து பாசன நீர் திறக்கப்படும்போது, திருப்பூர் மாவட்டம் வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் அமராவதி ஆற்றை பாசனத்திற்காக நம்பியிருக்கும் கரூர் மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது, அமராவதி அணையில் இரண்டாயிரம் கன அடி நீர் திறந்தால் மட்டுமே கரூர் மாவட்டத்திற்கு பாசனநீர் வந்து சேரும். ஆனால், அரசு தற்போது ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால், இந்த வருடமும் நீர் திருப்பூர் மாவட்டம் வரையிலான தேவைக்கு மட்டுமே பயன்படுகிறது.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஜல் சக்தி அபியான் திட்டம் மூலம் அலுவலர்களிடம் முறையிட்டுள்ளோம். இன்னும் மூன்று அல்லது இரண்டு நாட்களில் இரண்டாயிரம் கன அடி நீர் அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டவேண்டும். இல்லையெனில், கரூர் மாவட்டத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.