கரூர் நகர் பகுதியில் உள்ள மாவடியான் கோயில் தெருவில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கு வைக்கப்பட்ட திமுக விளம்பரப் பலகையை மறைத்து, அதிமுகவினர் விளம்பரப் பலகை ஒன்று வைத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து முன்னதாக திமுக பிரமுகர் பிரபாகரனுக்கும், அதிமுக பிரமுகருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்துள்ளது.
தொடர்ந்து, இது தொடர்பான புகார் கரூர் நகரக் காவல் நிலையத்தில் ஏற்கப்படாத நிலையில், மன உளைச்சலுடன் பிரபாகரன் வீடு திரும்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து பிரபாகரனின் உடல், கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அவருடைய உடலை வாங்க மறுத்து நேற்று (நவ.01) திமுகவினர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள கரூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நான்கு மணி நேரம் நீடித்த இப்போராட்டம் குறித்து தகவலறிந்த கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, ”உயிரிழந்த நபருக்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் புகார் மனு அளிக்கக் கூறியதன் பேரில்தான் போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் இந்த வழக்கிலிருந்து விடுபடவேண்டும். இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்”என்றார்.
இதையும் படிங்க:கட்சிப்பதவியில் ஏற்பட்ட பிரச்னை... சொந்தக் கட்சி அலுவலகத்தையே முற்றுகையிட்ட திமுகவினர்