கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பிரச்னைகளை ஆய்வு செய்துவருகிறார். அதுமட்டுமின்றி, பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கிவரும் நிலையில், முதலமைச்சர் உத்திரவிற்கிணங்க, ஆங்காங்கே பல்வேறு சிறப்பு திட்டங்களும் ஏரி, குளங்கள், கால்வாய்களை தூர்வாருவதிலும் தமிழ்நாடு அளவில் பெரும் முயற்சியெடுத்து செயல்படுத்திவருகிறார் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி திமுக கட்சியில் இணைந்த நாள் முதல் நாள்தோறும் கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஏராளமான திமுகவினர் அதிமுகவில் சத்தமே இல்லாமல் இணைந்துவருகின்றனர்.
இந்தச் சூழலில், கரூர் கிழக்கு ஒன்றியத்திற்குள்பட்ட வாங்கல் பகுதியில், பாப்புலர் முதலியார் வாய்க்காலினை தனது சொந்த செலவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர், கரூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வழக்கறிஞர் மதுசூதன் தலைமையில் கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுகவில் இணைந்தனர்.
இதேபோல், கோயம்பள்ளி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதனால் கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு சரிந்துவிட்டதோ என்று உடன்பிறப்புகள் முணுமுணுக்க தொடங்கிவிட்டனர்.