கரூர்: காட்டுப்பகுதியில் திமுக பெண் கவுன்சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே காட்டுப்ப குதியில் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டு, அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு, கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா, ஈரோடு மாவட்டம் சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக (திமுக) பொறுப்பில் உள்ளார். இவர் கரூர் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு கரூர் வந்த அவர், இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (செப்.26) மதியம் கரூர் மாவட்டம் பவுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை முருகன் கோயில் அருகில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் தலை நசுங்கிய நிலையில், அரை நிர்வாணதுடன் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த க.பரமத்தி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரூபாவின் உடலைக் கைப்பற்றினர்.
பின்னர் உடலை உடற்கூராய்விற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்றும், மேலும் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் க.பரமத்தி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்டச் செயலாளர் பசுவை பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, "கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் எல்லைக்கு உட்பட்ட பவித்திரம் பகுதியில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலரான ரூபா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரூபாவின் கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் முறையான விசாரணை நடத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிக்காக போராட்டம் நடத்தி வந்த திமுகவைச் சேர்ந்த கிளைச்செயலாளர் ஜெகநாதன், கடந்த ஆண்டு வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே பகுதியில் திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ரூபா சடலமாக மீட்கப்பட்டச் சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில், திமுக பெண் கவுன்சிலர் மரண வழக்கில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கவுன்சிலர் கார் மோதி உயிரிழப்பு..! சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த சோகம்!