திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி பிப்ரவரி 21ஆம் தேதி இலவச வேலைவாய்ப்பு முகாம் பிரம்மாண்ட அளவில் நடத்தப்பட உள்ளது. இதற்காக கரூர் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை நேற்று (பிப்.18) இரவு 11 மணியளவில் அதிமுகவினர் சிலர் கிழித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அங்கு கூடிய திமுகவினர் பேனரை கிழித்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்து, அங்கு கூடிய அதிமுகவினர் திமுகவினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் தகராறு முற்றி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவத்தில் அதிமுக மத்திய நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நவீன்குமார் தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் எதிரொலியாக பேருந்து நிலையம் பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் குவிக்கபட்டனர்.
திமுக மத்திய கிழக்கு நகர செயலாளர் கோல்டு ஸ்பாட் ராஜா தலைமையில், கரூர் நகர காவல் நிலையத்தில் பேனர் கிழிக்கப்பட்டது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொடுத்து திமுகவினர் புகார் அளித்தனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுக திமுகவினர் மோதல் சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: போலீசாருடன் மனிதநேய மக்கள் கட்சி தள்ளு முள்ளு