கரூர்: கரூர் மாவட்டம் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலத்திற்கு அருகில் பெரிய அளவிலான விளம்பரப் பதாகை வைக்கும் இடம் உள்ளது. இங்கு, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரான செந்தில் பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி திமுகவினர் சார்பில் டிஜிட்டல் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
விளம்பர டிஜிட்டல் பேனர் நிறுவனத்திடம் எட்டு நாள்கள் வரை அனுமதி பெற்று இந்த பேனர் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்.24) காலை அதே டிஜிட்டல் பேனர் மீது அதிமுகவினர் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்து அப்பகுதியில் திமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த கரூர் நகரக் காவல் நிலைய போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் திமுகவினர் சமாதானம் அடையாத நிலையில், அவர்களை கரூர் நகரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக கரூர், திருமாநிலையூர் அமராவதி ஆற்று மேம்பாலத்தில் திமுகவினர் திரண்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மின்கம்பியில் பறந்து விழுந்த விளம்பர பேனரால் 2 மணிநேரம் மின்தடை