கரூர்: நச்சலூர், இனங்கூர், நெய்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் பெய்த பருவமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. இதற்காக பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால், வேளாண் துறை சார்பில் பயிர் காப்பீட்டு இழப்பீடு கடந்த ஓராண்டாக வழங்காமல் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் மும்முனை மின்சாரம், பயிர் காப்பீட்டு இழப்பீடு உள்ளிட்டவற்றை காலதாமதமின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விசாரித்து 24 மணி நேரத்தில் பதில் அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, ஈடிவி பாரத் செய்திகளிடம் விவசாயி மகேந்திரன் கூறுகையில், "தற்பொழுது காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது விவசாயம் மேற்கொள்வதற்கு பொருளாதார வசதியின்றி விவசாயிகள் தவித்துவருகின்றனர். விரைந்து நிலுவையிலுள்ள பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு கடந்த ஜூன் மாதம் இறுதி வாரத்தில் மும்முனை மின்சாரத்தை நிறுத்தியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய 4 பேர் கைது