கரூர்: கரூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் சட்டவிரோத நீர் திருட்டைத் தடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "கரூர் மாவட்டத்தின் முக்கியமான நீர் ஆதாரம் அமராவதி. கடந்த சில வருடங்களாக அமராவதி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள், மணல் திருட்டு போன்றவை நடைபெற்று வருகின்றன.
மேலும் கடந்த இரண்டு வருடங்களாக சரியாக மழை இல்லாததால், ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கிணறுகளால் குறையும் நிலத்தடி நீர்மட்டம்
இந்நிலையில் அமராவதி ஆற்றில் கருப்பம்பாளையம், திருமாநிலையூர், வடகரை, ஆண்டான்கோயில் மேல்பாக்கம், ஆண்டான்கோயில் கீழ்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், அமராவதி ஆற்றின் உள்ளே சட்டவிரோதமாக கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னர் டேங்கர் லாரி மூலம் நீரைத் திருடி சாயப்பட்டறைகள், கிரசர் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயிகள் பாதிப்படைகின்றனர். ஆகையால், தண்ணீர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் துரைச்சாமி, ஆனந்தி அமர்வு முன்பு இன்று (ஆக.5) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 48 மணி நேரத்தில் நடிகர் தனுஷ் 50% வரியைக் கட்டவேண்டும் - உயர் நீதிமன்றம் அதிரடி