கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கரூர் அரசு சித்த மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இம்மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொற்று பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 713 நபர்களும், தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 493 நபர்களும் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அன்பழகனின் உத்தரவின்படி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நபர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், பொழுதுபோக்கிற்காகவும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது மனதிற்கு இதமான இசையும் ஒலிபரப்பப்படுகிறது.
மேலும், நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைத்து உத்வேகம் அளிக்கும் வகையிலும், கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடத் தேவையான வசதிகள் செய்துதர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், தினசரி செய்திகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தித்தாள்கள் வழங்கப்படுவதோடு, பொழுதுபோக்கிற்காக கேரம், சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுக்கான உபகரணங்களும் கரோனா நோயாளிகள் தங்கியுள்ள அறைகளில் வழங்கப்பட்டுள்ளன.