தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே, தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரதான அரசியல் தலைவர்களின் தேர்தல் பரப்புரை கார சாரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கரூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி கரூர் நகரத்திற்கு உட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது ஜோதிமணி பேசுகையில், “சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து கடந்த 23 ஆண்டுகளாக நேர்மையான அரசியல்வாதியாக பயணித்துக் கொண்டிருக்கும் எனக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு உறுதுணையாக சிறந்த மக்களவை உறுப்பினராக பணியாற்றுவேன். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்ற மக்கள் பயன்பெறும் வகையில் உழைப்பேன்” என்றார்.
மேலும், இந்த நிகழ்வில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகிய பலர் உடனிருந்தனர்.