தான்தோன்றிமலை அருகேயுள்ள முத்தலாடம்பட்டி பகுதியில் நாமக்கல் ஈச்சங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜா என்பவர் நான்கு ஜேசிபி வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி வழக்கம்போல் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் நான்கு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு ஜேசிபி வாகனத்தை மட்டும் காணவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில் ராஜா உடனடியான இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் கரூர் - திருச்சி சாலை, கரூர் - திண்டுக்கல் சாலை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கரூர் - திருச்சி சாலை ஏமூர் மேம்பாலம் அருகே ஜேசிபி வாகனம் ஒன்று பழுதாகி நிற்பதைக் கண்ட காவல் துறையினர் அருகாமையில் சென்று விசாரித்தபோது, அங்கிருந்த நபர் முன்னுக்கு முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த காவலர்கள் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், தரகம்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் என்பதும் ஜேசிபி வாகனத்தை திருடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்ட தாந்தோன்றிமலை காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு!