கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தானாக இயங்கிய கணினி
அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், வேட்பாளர்களின் முகவர்களும் காலை, மாலை, இரவு என சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகேயுள்ள கட்டடத்தில் உள்ள கணினிகள் ஆள்கள் யாரும் இல்லாமல் இயங்கியதாக திமுகவினர் குற்றஞ்சாட்டினர்.
மேலும், இது தொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரசாந்த் மு வடநேரே, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாசாங் சாய், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து, அந்தக் குறிப்பிட்ட அறையைத் திறந்து கணினி எவ்வாறு இயங்கியது என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர். அலுவலர்களின் செயல்பாடுகள், விளக்கங்கள் திமுகவினருக்கு திருப்தி அளிக்காததால், பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் இன்று காலை விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததால், திமுகவினர் கலைந்துசென்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள சில வாக்கு எண்ணும் மையங்களில் நவீன கண்டெய்னர் லாரிகள் சந்தேகப்படும் வகையில் நிறுத்தப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் கரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தானாக கணினி இயங்கியது பல்வேறு சந்தேகங்களை கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ’ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் தொலைபேசியில் மிரட்டுகிறார்கள்’