கரூர்: மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், விசாரணை அலுவலராகிய கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.த.பிரபுசங்கர் கலந்துகொண்டு மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூர், வாங்கல், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்த மனுக்கள் மீதான விசாரணையை கரூர் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் மேற்கொண்டார்.
இதில் மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில் குமார், சமூக பாதுகாப்பு நல தனி வட்டாட்சியர் புகழேந்தி, மண்மங்கலம் மண்டல துணை வட்டாட்சியர் ம.சண்முகப் பிரகாசம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என்.ஷாஜகான் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்ததாவது:
'கரோனா தொற்று பரவல் காலத்தில் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 1430ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாக மனுக்கள் பெறுவதற்கு பொதுமக்கள் வசதிக்காக, கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் htttp://dgp.tn.gov.in/jamabanthi என்ற இணைய முகவரி மூலம் பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டன.
மண்மங்கலம் வட்டத்திற்கான விசாரணை அலுவலராக மாவட்ட ஆட்சியர் ஆகிய நான், விசாரணை மேற்கொண்டேன். இந்த முகாம் வரும் திங்கட்கிழமை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மேலும் இணைய வழியே குவிந்துள்ள புகார்கள் குறித்து 3 நாட்களில் தீர்வு எட்டப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஒன்றிய அரசு vs மத்திய அரசு; தேவைப்பட்டால் வழக்கு' - பாஜக