கரூர்: பொங்கல் விழாவை முன்னிட்டு கரூரில் ஆண்டுதோறும் சேவல் சண்டை நடப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சி சட்டவிரோதமாக நடப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று போடப்பட்டுள்ளது.
கரூர், தாந்தோணி பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலம்வலசு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல் சண்டை நடத்தப்பட்டுவருகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் வெறும் கால்களில் சேவல் சண்டை விடுவதாக உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சேவல் சண்டை நடத்துகின்றனர். ஆனால், இந்தச் சேவல் சண்டைப் போட்டிகளில் சட்டத்திற்குப் புறம்பாக சேவல் கால்களில் கத்தியைக் கட்டி சண்டைக்கு விடுகின்றனர்.
இதனால், ஆண்டுதோறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டுவருகிறது. எனவே, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா பூலம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த தடைவிதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் எவ்வாறு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும் வழக்கு குறித்த தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திட்டம் தீட்டிய கொள்ளையர்கள் - கட்டம் கட்டிய காவல்துறை!