கரூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களை பெறுவதற்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதற்காக கட்சி சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி காந்தி கிராமம் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு காந்தி கிராமம் பகுதியில் மேற்கொண்டு வருகிறார்.
இதன் இடையே கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கரூர் மாவட்டத்தில் சீமான் நுழைவதற்கு காவல்துறை அனுமதி அளிக்கக்கூடாது என்றும் மனு அளித்தார்.
தொடர்ந்து கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின், ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் மக்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்கும் எதிராக சமீப காலமாக பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
குறிப்பாக கிறிஸ்தவ மக்களை சாத்தானின் பிள்ளைகள் என பேசியது பலரையும் மனதளவில் காயப்படுத்தி உள்ளது. கிறிஸ்துவ கல்வி நிலையங்கள் இல்லாவிட்டால், தமிழகத்தில் கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்காது. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது ஒரு மாத காலமாக சீமான் எங்கு சென்றார்?.
அந்த மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை. தமிழகத்தில் வசிக்கும் பல்வேறு தரப்பு மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சமீப காலமாக தமிழகத்தில் வசிக்கும் தமிழர்கள் சீமானிடம் சான்றிதழ் பெற வேண்டும் என நினைத்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்" என்றுக் கூறினார்.
மேலும் பேசிய அவர், "கிறிஸ்தவ சிறுபான்மையின மக்களை சாத்தானின் பிள்ளைகள் என்று பலரது மனதை புண்படுத்தும் வகையில் அவர் பேசி இருப்பது கடுமையான கண்டனத்திற்கு உரியது. இதனால் ஆகஸ்ட் 28ஆம் தேதி கரூர் காந்தி கிராமம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கரூர் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என மனு அளித்துள்ளோம்.
அதனை மீறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூர் மாவட்டத்திற்குள் வருகை தந்தால், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவோம். மேலும் தமிழகம் முழுவதும் சீமான் செல்லும் இடங்களில் கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தின் பல்வேறு அணிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விளையாட்டு பொம்மைகளில் மறைத்து தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய குருவிகள்!